Friday, December 21, 2018

உள்ளம் புகுந்து குளிர்ந்து

“மணல் நதி" என்று ஒரு நாவல் . திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதியது. காசி/கயாப் பற்றியும் சிரார்த்தம் செய்வதின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சொல்லும் அருமையான நாவல். திரு.பாலகுமாரன் அவர்கள் காசி/கயாக்கே நம்மை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் காட்டியிருக்கிறார். இதே போல் ஆழமான விஷயங்களை இனி யார் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த நாவலில் ஒரு இடத்தில் சீனிவாசன்(பாலகுமாரன் தன்னை சீனிவாசன் என்று அழைத்துக் கொள்வார்) என்பவர் புத்தர் ஞானம் பெற்ற இடத்திற்குச் செல்வா. அங்கு வஜ்ராசத்தில் அமர்ந்திருக்கும் புத்தரைப் பார்த்து திகைத்து நிற்பார். அவரின் திகைப்பு, பிரமிப்பு எல்லாவற்றையும் எழுத்தில் படித்துக் கொண்டேவரும்போது திடீரென்று “கிடந்தவாறு எழுந்து நின்று பேசியது" என்ற ஒரு வரி வந்தது. அட....இது திருமழிசை ஆழ்வாருடைய பாட்டு போல் இருக்கிறதே என்று நினைத்து முடிப்பதற்குள், அடுத்த வரி “கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே ....” என்று இருந்ததைப் படித்தவுடன்..... ஓரே பூரிப்பு, ஆராவாரம், சந்தோஷம்....காசியைப் பற்றியும், கயாவைப் பற்றியும் படித்துக் கொண்டிருக்கும் போது....எங்கிருந்து வந்தார் இந்த குடந்தை கேசவன்....சரி, வரட்டும்...அதற்கென்ன இத்தனை சந்தோஷம்......தெரியவில்லை....அந்த வரியை விட்டு கண்ணும் நகரவில்லை....மனமும் நகரவில்லை....ஏதோ ஒரு கதையில் எப்படியோ நுழைந்து.....திக்குமுக்காடச் செய்து.....அட, இது தான் உள்ளம் புகுந்து குளிர்ந்தா?






Tuesday, March 13, 2018

அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்

 நான் மனதில் நினைப்பவைகள் எல்லாம்  எனக்கே தெரியாமல் போகலாம், அந்த ரங்கனுக்கு தெரியாமல் போகுமா என்ன?

சில நாட்களாக....இல்லை...இல்லை....பல நாட்களாக என் மனதில் ஒரு விஷயம் ஒடிக் கொண்டிருந்தது.  " ஸ்வாமி ராமானுஜர்" என்றால் உடல் உருகி, உள்ளம் குளிர்கிறது.  அதே உடல் உருகலோ, உள்ளம் குளிர்தலோ "ஸ்வாமி மணவாள மாமுனி" என்று சொல்லும் போது ஏற்படுவதில்லை.  உபதேசரத்தினமாலையும், யதிராஜ விம்சதியும்  சேவித்தாலும், ஸ்வாமி ராமானுஜர் மேல் இருக்கும் ஈடுபாடு ஸ்வாமி மணவாள மாமுனியின் மேல் இல்லை.  என்ன காரணம் என்று தெரியவில்லையே....ஸ்வாமி மணவாள மாமுனியின் மேல் ஈடுபாடு வருமா இல்லையா? தெரியவலில்லையே.....மனதின் ஓட்டத்தை அந்த ரங்கன் கண்டு கொண்டான்.  திடீரென்று, காரணமே இல்லாமல் ஒருவர் என்னிடம் "திருவாய்மொழி நூற்றந்தாதி" கற்றுக் கொள்ளேன் என்று சொல்ல....திருவாய்மொழி நூற்றந்தாதி பற்றி ஏதும் அறியாத நான், அதை கற்றுக் கொள்ள தயாரானேன். முதல் நாள் இரவு  ஃபோனில் சந்தை upload பண்ணியாகி விட்டது... மறு நாள் துவங்குவோம் என்று முடிவு எடுத்தால்......நான்கு நாட்கள் சந்தை சொல்ல முடியாதபடி ஒரு துக்கம்..... அது முடிந்து துவங்குவோம் என்று நினைத்தால்.....அந்த "மூன்று" நாட்கள்....சுறு சுறு என்று கோவம்....அந்த ரங்கன் மேல் தான்..."ஏதோ கத்துக்கலாம்னு நினைக்கும் போது ஏன் தடங்கல் பண்ற....இனி நான் திருவாய்மொழி நூற்றந்தாதி கத்து முடிக்கற வரைக்கும் எந்த தடங்கலும்...அந்த "மூன்று" நாட்கள் தவிர எந்த தடங்கலும் தரக்கூடாது.   நானும் அந்த நாட்கள டார்கெட்டா வச்சிண்டு மாசா மாசம் இருவத்துஞ்சு பாட்டு கத்துண்டு நாலு மாசத்துல முடிச்சுடறேன்.  உனக்கும் எனக்கும்  டீல்........"  போட்ட டீலின் படி அதன் பிறகு ஒரு தடங்கலும் வரவில்லை என்றாலும்...ஒரு மாதத்திற்குள் இருபத்தி ஐந்து பாசுரங்கள் கற்றுக் கொள்வது
எனக்கு கடினமாய் தான் இருந்தது.  வேறு எங்கேயும் கவனம் செலுத்தாமல்....சந்தை கற்றுக் கொள்வதே  குறியாகி விட்டது .  சமையல் செய்யும் போது, பாத்திரங்கள் தேய்க்கும் போது, துணிகள் மடித்துக் கொண்டிருக்கும் போது....கிடைத்த நேரத்தில் எல்லாம் சந்தை கேட்பது வாடிக்கையாய் போனது. வேறு நேரங்களில் அந்த பாசுரங்கள் மனதில் வந்து வந்து சென்று கொண்டிருந்தது. பாசுரங்கள் மட்டுமா வந்தன....அதை பாடிய ஸ்வாமி மணவாள மாமுனிகளும் மனதில் வந்து உட்கார்ந்து கொண்டார் என்னிடம் சொல்லாமல், எனக்கும் தெரியாமல்.   அவர் என் உள் புகுந்ததை,  ஒரு நாள்  காலை பெருமாள் சேவிக்கும் போது   என்னையும் அறியாமல் "மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும்" என்று கைகூப்பிய  நிமிடத்தில் உணர்ந்து கொண்டேன்.  உணர்ந்த நேரத்தில் உடலும் உள்ளமும் சிலிர்த்தது உண்மை...அந்த சிலிர்ப்பு இன்று வரை தொடர்வதும் உண்மை....அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்.

ஒரு மாதம் முன்பு எழுத்தாளர் திரு.  பாலகுமாரன் அவர்கள் திருமுக்கூடலில் அவருக்கு ஏற்பட்ட பரவச அனுபவத்தைப் பற்றி எழுதியிருந்தார்.  
படித்து முடித்த பின் பிரமித்துப் போனேன்.  எப்பேர்ப்பட்ட அனுபவம் அது....மீண்டும் மீண்டும் படித்து, பிரமித்து, வியந்து.....கடைசியில் தன்னிரக்கத்தால் புலம்பும் நிலைக்கு தள்ளப் பட்டேன்.  "பெருமாளே...உனக்கு ரொம்ப ஒர வஞ்சனை.  எவ்ளோ கோவிலுக்கு நானும் வந்திருக்கேன்.  இந்த மாதிரி ஒரு அனுபவத்தை குடுத்துருக்கயா.....பாலகுமாரன் பெரிய ரைட்டர்.   அவருக்கு இந்த மாதிரி அனுபவம் குடுத்தா, அவர் நன்னா எழுதி உன் பெருமைய உலகுக்கு எல்லாம் சொல்லுவார். அதனால தான குடுத்த...." இன்னும் ஏதேதோ பச்சாதப புலம்பல்.  பின் அந்த புலம்பல் மறந்து போனது.   திருவாய்மொழி நூற்றந்தாதி முழுவதும் கற்று  முடித்த அன்று...."பெருமாளே, போட்ட டீல் படி எனக்கு வேற ஒண்ணும் தடங்கல் குடுக்கல. நானும் கத்து முடிச்சுண்டேன்.  ரொம்ப தேங்க்ஸ்..." என்று கைகூப்பிய போது ஒன்றும் தெரியவில்லை.  கீழே விழுந்து சேவிக்கும் போது...என் முன்னே உயரமாய் ஸ்வாமி ராமானுஜர் நிற்க...நான் அவரை சேவிப்பது போல் ஒரு தோற்றம்.  உடம்பு என்னவோ செய்தது. இது என் பிரமையாகக் கூட இருக்கலாம்.  இருந்தாலும் அந்த உணர்வு....திரு. பாலகுமாரன் அவர்களுக்கு ஏற்பட்டது போல்.....அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்.

சரி, திருவாய்மொழி நூற்றந்தாதி கற்றுக் கொண்டாகிவிட்டது.  இந்த பாசுரங்களுக்கு எனக்கு அர்த்தம் தெரிய வேண்டாமா... அந்த நினைப்பு காற்றோடு கலந்து போய்விட்டது.  அர்த்தங்களை தெரிந்து கொள்ள நான் ஏதும் பிரயத்தனம் படவில்லை.   இப்படி இருக்கையில் googleலில் நான் எதோ தேடிக் கொண்டிருக்கையில் எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி அவர்களின் திருவாய்மொழி நூற்றந்தாதி உபன்யாஸம் கிடைத்தது.  அட....என்று வியந்து போய் அதை கேட்டு முடித்த அடுத்த நாள்....வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உபன்யாசத்தில் திருவாய்மொழி நூற்றந்தாதியிலிருந்து சில பாசுரங்களை எடுத்துக் கொண்டு அழகாய் உபன்யசித்தார்.... என் பிரயத்தனம் ஏதுமின்றி எனக்கு அர்த்தம் வந்த சேர்ந்தது...
.அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்.

மகாகவி பாரதியாரின் "வருவாய் வருவாய் கண்ணா" பாடலில், "கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா..." என்ற ஒரு வரி வரும்.  யாருக்கு தான் கண்ணனை கருவில் சுமக்கும் ஆசை இருக்காது.  எனக்கும்  அந்த ஆசை இருந்தது.  திருவாய்மொழி நூற்றந்தாதி கற்றுக் கொண்ட  நான்கு மாதத்தில் அந்த ஆசை மாறிவிட்டது.  அந்த நான்கு மாதங்களும் வெளி உலகத்தார் தொடர்பு அதிகம் இல்லாமல், பாசுரத்தின் உள்ளும் பெருமாளின்  கண் பார்வையில்  இருந்தேன்.  யார் என்ன சொன்னால் நமக்கு என்ன, யார் எப்படி போனால் நமக்கு என்ன..... நம் வேலை பாசுரங்களைக் கற்றுக் கொள்வது என்று ஒரே நோக்கில் இருந்தேன்.  யாரிடமும் வாலாட்டவும் இல்லை, வாய் கொடுத்து மாட்டிக் கொள்ளவும் இல்லை......நிம்மதியாய், அமைதியாய், அழகாய் இருந்தது அந்த இடம்.  கற்று முடித்த பின் வெளியே வந்தால்...நன்றாய் தான் இருந்தது.....ஒன்றும் குறையில்லை....ஆனாலும் ருசி கண்ட பூனை போல் மீண்டும் பாசுரங்களுக்கு உள்ளேயும், பெருமாளின் பார்வையிலும் இருக்க ஆசை.  கருவாய் கண்ணனை சுமந்தால் அவனை நான் பார்த்துக் கொள்ள வேண்டும் .  அது எனக்கு தேவையில்லை.  அவன் பார்வையில், அவன் பக்கலில் நான் இருக்க வேண்டும்.  அதற்கு மீண்டும் நான் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும்....ஆனால் என்ன கற்றுக் கொள்வது என்று தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த போது....ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசத்தில்..."உங்களுக்கு ஏதாவது கத்துக்கணும்னு ஆசை இருந்தா, திருமாலை கத்துக்கோங்கோ...நாற்பத்தி ஐந்தே பாட்டு தான்... ரொம்ப சுலபம்........." அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்.

கடைசியாக, திருவாய்மொழி நூற்றந்தாதியைப் பற்றி எழுதுகிறோம்.  ஸ்வாமி மணவாள மாமுனியின் அழகான புகைப்படம் கிடைதால் நன்றாய் இருக்கும் என்று நினைத்து முடிப்பதற்குள், புகைப்படம் வந்து சேர்ந்தது.

z

அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்...


Saturday, March 26, 2016

கத்யத்ரயமும், கிரகணமும்.




இந்த நிமிடம் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  மிக மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன்.  ஆங்கிலத்தில் euphoria என்று ஒரு வார்த்தை இருக்கிறது.  அதன் அர்த்தத்தை இப்பொழுது உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், இன்று காலை எழுந்திருக்கும் போதே கோபமும், பதட்டமும் உச்சகட்டத்தில் இருந்தது.  கோபத்திற்குக் காரணம் "கிரகணம்'.  பதட்டத்திற்க்குக் காரணம்,  நாளைக்குள் அனுப்ப வேண்டிய என்  ஆங்கில கட்டூரை ஒன்றுக்கு,  என்ன எழுதுவது என்று தெரியாமல்,  நான் திணறிக் கொண்டிருந்தது.   இது போதாது என்று  இன்று "பங்குனி உத்திரம்" வேறு.  பெரிதாக ஏதும் கொண்டாட்டம் ஏதும் கிடையாது என்றாலும்,  ஸ்வாமி இராமானுஜர் இயற்றிய "கத்யத்ரயம்" சேவித்து,   "சர்க்கரைப் பொங்கல்" செயவதை வழக்கமாக கொண்டிருந்தேன். எழுதி முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால், சுலபமாக இருக்கும் என்று, எனக்கு பிடிக்காத கேசரி செய்துவிடலாம் என்று நேற்று இரவே முடிவு செய்து விட்டேன்.

இதில் நடுவில் குட்டையை குழப்பியது கிரகணம்.  இன்று கிரகணம் என்று எனக்கு தெரியாது.  காலையில் எழுந்திருக்கும் போது என் தோழியின் வாட்ஸப் மெசேஜ் தெரியாத்தனமாக கண்ணில் பட்டுவிட்டது.  (நேற்று இரவே அனுப்பி இருக்கிறாள்.  நான் காலையில் தான் பார்க்க நேர்ந்தது). "நாளை காலை சந்திர கிரகணம். 5:30 -10:15".  கோபம் தலைக்கேறியது.  மணி ஏற்கனவே நாலே முக்கால் ஆகிவிட்டது.  ஐந்தரை மணிக்குள் என் பிள்ளைகளுக்கு, பள்ளிக்கு எடுத்த செல்ல "லஞ்ச்" பண்ணிவிட்டாலும், அவர்கள் காலை உணவு உண்ணும் போது கிரகணம் இருக்க தானே செய்யும்.  கிரகணம் முடிந்து எப்படி தலைக்குக் குளிப்பார்கள்?  கிரகணம் என்று தெரியாமலே இருந்திருந்தால் அது வேறு விஷயம்.  தெரிந்த பின் கடைபிடிக்காமல் இருப்பதற்கு மனம் ஒப்பவில்லை.  கடைபிடிப்பதற்கும் சந்தர்ப்பம சரியாக இல்லை.  எனக்கு கிரகணத்தைக் காட்டிய அந்த  தோழிக்குக் கோபத்துடன் மெசேஜ் அனுப்பினேன். "அம்மா, தாயே, இன்னொறு முறை இதே போல் ஏடாகூடமாக கிரகணம் வரும் போது தயவு செய்து என்னிடம் சொல்லாதே."

அனுப்பிய பின்னும் நான் அடங்கவில்லை.  மண்டைக்குள் எழுதி முடிக்க வேண்டுமே எனற சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை இல்லை. "வானத்தில் ஏதோ நடக்கிறது, அதற்கு இங்கு நான் ஏதேதோ கடைபிடிக்க வேண்டுமாம்.  வேறு வேலை இல்லை. ஆபிஸ் செல்பவர்கள் எல்லாம் கிரகணாமா கடைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்? எனக்கு என் எழுத்து முக்கியம்.  கட கட வென்று என் சமையலை முடித்து விட்டு நான் எழுத போக வேண்டும்.  பெருமாளே, கேசரியை கிரகண நேரத்தில் செய்வதற்கு எனக்கு இஷ்ட்டம் இல்லை. கத்யத்ரயம் சொல்வதற்கும் நேரம் இல்லை.  எல்லாம் கேன்சல்.   என்னை மன்னித்துவிடு.," என்று மனதில் சொல்லிவிட்டு, பிள்ளைகளுக்கு "லஞ்ச்" செய்து முடித்து, சரியாக 5.40க்கு கிரகண நேரத்தில் குக்கரில் தண்ணி பிடிக்கும் போது,  முன்பு ஒரு கிரகண நாள் அதிகாலையில்  (இரண்டோ, மூன்றோ ஞாபகம் இல்லை), என் அப்பா தர்ப்பணத்தை முடித்து விட்டு மாடியிலிருந்து படி இறங்கி வரும் காட்சி என் கண் முன்னே ஒடியது.  எந்த வயதிலும், எந்த சாஸ்த்திர சம்பிரதாயங்களையும் விடாமல் கடைப்பிடித்த என் அப்பாவிற்கு, பெண்ணாக பிறந்து விட்டு இந்த மாதிரி ஒரு காரியம் நான் செய்யலாமா? கேள்வி எழுந்தது.  யார் எப்படி போனால் எனக்கு என்ன? என் அப்பாவின் பெண் ஒரு நாளும் சம்பிரதாயங்களைக் கடைப்பிக்காமல் இருக்க மாட்டாள் என்று சூளுரைத்துவிட்டு, குக்கரில் பிடித்த தண்ணீரைக் கீழே கொட்டினேன்.  சமையல் வேலை இல்லை.  எழுத வேண்டியது தான்.

நேராகச் சென்று கம்ப்யூட்டரை எடுத்தேன். நானே  தேர்ந்தெடுத்த தலைப்பு தான்.  எப்படி எழுதுவது என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை.  இது வரை எழுதியது அனேகம் என்றாலும், இப்பொழுது முதல் முதலாக ஒரு எழுத்தாளராக ஒரு ஆங்கில பத்திரிகைக்கு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  தமிழில் எழுதுவதே கஷ்ட்டம்.  ஆங்கிலத்தில் எழுதுவது அதைவிட கஷ்ட்டம்.  அதையும் தவிர "அமெரிக்க" வாசகர்களுக்காக "அமெரிக்க ஆங்கிலத்தில்" எழுதுவது மிகவும் கஷ்ட்டம்.  உதாரணத்திற்கு "he will not come" என்று நாம் சொல்லும் ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலத்ததில் " he is not going to come" என்று மாறும்.  எழுத ஆரம்பித்தால் தானே, அமெரிக்க ஆங்கிலத்தில் எழுதுவது?  ஒரு மணி நேரம் சென்றும் ஒரு வார்த்தைக் கூட நான் எழுதவில்லை.  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மீண்டும் ஏழே முக்காலுக்கு கம்ப்யூட்டரை எடுத்து மடியில் வைத்துக் கொண்டது தான் தெரியும்.  எப்படி எழுத ஆரம்பித்தேன் என்றே தெரியவில்லை.  எழுதி முடித்து நினைவிற்கு வரும்போது பார்த்தால் மணி  பத்தரை.  அந்த நிமிடம் என் மனம் ஏன் சந்தோஷத்தில் துள்ளியது என்று தெரியவில்லை. எழுதி முடித்த சந்தோஷமா, கிரகணம் முடிந்த சந்தோஷமா என்று தெரியவில்லை.

என்னை எழுத வைத்த அந்த கடவுளுக்கு கத்யத்ரயம் என்னால் சொல்ல முடியாதா, ஒரு சர்க்கரைப் பொங்கல் என்னால் பண்ண முடியாதா?  கேள்வி எழுந்தது.  குக்கரில் தண்ணியைப் பிடித்தேன்.  யூ ட்யூபில் "கத்யத்ரயம்"  ஸ்லோகம் ஒலிக்க ஆரம்பித்த போது, பதினெட்டு வருடங்களுக்கு முன்னால் எனக்கு கத்யத்ரயம் கற்றுக் கொடுத்து என் குருவான அந்த பெண்மணியின் நினைவு வந்தது.  கத்யத்ரயம் மிகவும் கடினம் எனக்குக் கற்றுக் கொள்ள வேண்டாம் என்று  நான் பின் வாங்கிய போது என்னை ஊக்கப்படுத்தி நல் வார்த்தைகள் சொல்லி விடாப்பிடியாக எனக்குக் கற்றுக் கொடுத்தாள். ஸ்லோகங்களை மற்றும் சொல்லிக் கொடுக்காமல், அதன் அர்த்ததையும் கூடவே சொல்லிக் கொடுத்தாள்.  இன்று சொன்ன போது ஸ்லோகங்கள் சில இடத்தில் நான் மறந்துவிட்டாலும். அர்த்தம் நன்றாய் நினைவில் இருந்தது.  கத்யத்ரயம் சொல்லி கொண்டே சர்க்கரைப் பொங்கல் செய்ததாலோ என்னவோ இன்று  சக்கரைப் பொங்கல் மிகவும் அருமையாய் வாய்த்திருந்தது.  மனம் சந்தோஷத்தில் பூரித்துப் போனது

இத்தனையும் செய்த "அவர்", ஆரம்பத்திலிருந்தே என்னை நல்வழியில் செலுத்திருக்கலாம்.  போகட்டும் அடுத்த முறை நான் வழிமாறிப் போகும்பொழுதாவது முதலிலேயே என்னை திருத்துகிறாரா பார்ப்போம்?  இன்று என் அப்பாவைக் காட்டி என்னை நல்வழிப் படுத்தினார்.  அடுத்த முறை யாரோ?

என் கடைமைகள் எல்லாவற்றாயும் ஒழங்காக செய்து விட்டதாலோ என்னவோ,
இந்த நிமிடம் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  மிக மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன்.  ஆங்கிலத்தில் euphoria என்று ஒரு வார்த்தை இருக்கிறது.  அதன் அர்த்தத்தை இப்பொழுது உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

Tuesday, October 28, 2014

திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்

வாஷிங்டன் டி.சி. சாலையில்  எங்கள் கார் சென்று கொண்டிருந்தது.


நியூயார்க் நகரில் இருப்பது போல், வாஷிங்டன் டி.சி.யில் விண்ணை முட்டும் கட்டிடங்கள் கிடையாது.  இங்கு இருப்பவை எல்லாம் சிறிய கட்டிடங்களே ஆனாலும், எல்லாம் சரித்திரம் பேசும் கட்டிடங்கள்.  அப்படியாகப்பட்ட சரித்திரப் புகழ்ப்பெற்ற கட்டிடங்கள் நிறைந்த "கான்ச்டிட்யூஷன் அவென்யு" வில்,  கார் திரும்பியது.  சூரியன் மறைந்து, இரவு உதயமாகிக் கொண்டிருந்தது.


"இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?" என் இடது புறம் ஸ்டீயரிங்கின் மேல் கையையும், சாலையின் மேல் கண்ணையும் வைத்துக் கொண்டிருக்கும் கணவரைக் கேட்டேன்.


"கைலயோ மேப் இருக்கு.  பாக்க வேண்டியது தானே."


"ரொம்ப தான், சொன்னா என்ன" என்று மனதில் கூறிக் கொண்டு, கையில் உள்ள வரைபடத்தை பார்த்தேன். என் நல்ல நேரம், அந்த வரைபடம் புரிந்தது.


"இந்த கான்ச்டிட்யூஷன் அவென்யுலயே போயிண்டு இருந்தா, அது பென்சில்வேனியா அவென்யுல ஜாயின் ஆறது.  அதுலயே போனா, போர்த் ஸ்ட்ரீட் தாண்டி, தர்ட் ஸ்ட்ரீட்ல ரைட்ல திரும்பணும்."


"நம்ம அமெரிக்கா வந்த இத்தனை வருஷத்துல, அந்த பில்டிங்க பாக்க போறது, இது  பத்தாவது தடவையா இல்ல இருவதாவது தடவையா?" அவர் குரலில் கிண்டலும், கேலியும் சரிவிகிதமாக கலந்திருந்தது.


"இதெல்லாமா கணக்கு வைச்சுப்பாங்க."   என் வலது புற ஜன்னலின் வழியே சாலையில் நடப்பட்ட மரங்கள் ஆடாமல், அசையாமல் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.  "ஆனா, நம்ம ஒரு தடவை கூட ராத்திரில பாத்ததில்லையே."


"கார்த்தால ஒரு மாதிரி இருக்க, ராத்திரி ஒரு மாதிரி இருக்க அந்த பில்டிங் என்ன சந்திரமுகியா?"


"ஜோக்கு?" முறைத்தேன்.  "ராத்திரி லைட்டெல்லாம் போட்டு சூப்பரா இருக்குமாம்."


முன்னால் நடப்பது ஏதும் தெரியாமல், பின்னால் அமர்ந்திருந்த பிள்ளைச் செல்வங்கள்,  டிவிடி ப்ளேயரில் எலியும் பூனையும் சண்டையிட்டுக் கொள்வதைப்  பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன.


"ஆனாலும் இது ரொம்ப ஓவர்.  நம்ம வீடு வாஷிங்டன் டி. சி. பக்கத்துல இருக்குங்கறதுக்காக….." என்றவரை இடைமறித்தேன்.


"இப்டியே என்னை கலாட்டா பண்ணிண்டு இருந்தா, வழி மிஸ் ஆயிடும்,"  சொல்லிய படியே கையில் இருந்த வரைபடத்தைப் பார்த்தேன்.


வண்டி சடக் என்று நின்றது.


"ஏன், என்ன ஆச்சு?"


"அமெரிக்காவானாலும் ரெட் லைட் போட்டா நின்னு தான் ஆகணும்."


முன்னால் தெரிந்த பெரிய சிவப்பு பொட்டு என்னை பார்த்து முறைத்தது.


"இந்த ரெட் லைட்ட கண்டுபிடிச்சவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும்," மனதில் கறுவிக் கொண்டேன்.  கறுவியதின் விளைவு, பச்சை வண்ண பொட்டு என்னைப் பார்த்து கண் சிமிட்டியது.


பச்சை விளக்கிலிருந்து புறப்பட்ட வண்டி, சிறிது தூரம் நேராகச் சென்று,  பின், பென்சில்வேனியா அவென்யூவில்  சேர்ந்தது.


"வந்துட்டோம், கிட்டத்தட்ட வந்துட்டோம்."   வரைபடத்தை கண் ஆராய்ந்து கொண்டிருந்தது.
"இந்த போர்த் ஸ்ட்ரீட் தாண்டி…." என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்தேன். மலைத்துப் போனேன்.
நெடிது உயர்ந்த மரங்களின் ஊடே அந்த கட்டடம் தெரிந்தது.  மீண்டும் ஒரு முறை பார்பதற்குள் இலைகளின் நடுவே மறைந்து போனது. கார் சிறிது தூரம் செல்ல மீண்டும் இலைகளின் நடுவே அந்த காட்சி.


கார் வலது பக்கம் தர்ட் ஸ்ட்ரீட்டில் நுழைந்தது.


"பின்னாடி கார் எதுவும் வரல.  கொஞ்சம் மெதுவா ஜானவாச கார்  மாதிரி போங்கோ."  காரின் வேகம் மாறியது.


காரின் இடது பக்க ஜன்னலின் வழியே,  ஒரு மைல் தொலைவில், தேடி வந்து காட்சி.  இருட்டில் ஜகஜ்ஜோதியாக மின்னிக் கொண்டிருந்தது  அமெரிக்காவின் பாராளுமன்றம்.



இடமிருந்து வலமாக 750 அடி(எங்கயோ படித்த ஞாபகம்) நீளத்திற்கு  விரிந்திருந்தது.  கட்டிடம் முழுவதும் மஞ்சள் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு இருந்தது.  கட்டிடத்தின் மத்தியில் வெள்ளை நிறத்தில் இரண்டு அடுக்குகள் கொண்ட மேற்கூரை உட்கார்ந்திருந்தது.  முதல் அடுக்கு பறை வாத்தியம் போல் உருண்டு திரண்டு இருந்தது. அதன் மேல், கவிழ்த்து வைக்கப்பட்ட சந்தன பேலாவைப் போல் இரண்டாம் அடுக்கு வீற்றிருந்தது.  இரண்டாம் அடுக்கின் மேல், ஒரு காக்கை ஒன்று உட்கார்ந்திருப்பது போல், கருப்பு வண்ணத்தில் சிலை ஒன்று நின்று கொண்டிருந்தது.


இருட்டின் கருப்பு, விளக்குகளின் மஞ்சள், உச்சிகூரையின் வெண்மை எல்லாம் சேர்ந்து  மனதை மயக்கத்தில் ஆழ்த்தியது. கண்கள் காதுகள் வரை விரிந்தது.  வாய் மூக்கு வரை பிளந்தது.  கைகள் கன்னத்தை வந்தடைந்தது.  ஆஹா, என்ன அழகு…வியந்து கொண்டிருந்த போது  மெல்லிய "ஹாங்" சத்தம்.


"பின்னால கார் வந்துடுத்து.  இனிமே மெதுவா போ முடியாது."


கணவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கார் வேகமாக செல்ல, கடைசி முறையாக மின்னும் அழகை கண்களில் வாங்கிக் கொண்டேன்.


"நம்ம இந்தியா பார்லிமெண்ட் கூட, ராத்திரில லைட் எல்லாம் போட்டு சூப்பரா இருக்குமா இருக்கும். நம்ம தான் போய் பார்த்தது கிடையாது," அவர் குரலில் ஆதங்கம்.


இந்தியா என்றவுடன், மனம் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது.  இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில், இதே போல் இருட்டில் ஒளியைக் கண்டு,  மெய் சிலிர்த்து நின்றது நினைவில் வந்தது.  "அட, பைத்தியமே, இதே போல் இல்லை.  இதற்கும் மேலாக, ஈடு இணையற்ற அனுபவம் அது," என்று மனம் இடித்தது.  இந்தியாவில் எங்கே, எங்கே என்று மனம் நினைவலைகளில் நீந்தித் தேடியது.  தேடித் தேடி, கர்நாடகாவில் வந்து நின்றது.


அப்பொழுதும் இதே போல் ஒரு காரில் பயணம்.  கார் ஒரு செம்மண் சாலையில்  நின்றது.


"கோவில் வந்துடுச்சுங்க," டிரைவர் காரின் என்ஜினை அணைத்தார்.



காரை விட்டு இறங்கினோம்.  ஒரு கொடி மரமும், அதன் பின் செவ்வக மண்டபம் ஒன்றும் தெரிந்தது. கோவில் என்கிறார், கோபுரத்தைக் காணோமே என்ற என் மனதின் சந்தேகம் மாமியாரின் வார்த்தையில் வந்தது.


"கோவிலுக்கு கோபுரம் கிடையாதா?"


கர்நாடகாவில் தமிழ் தெரிந்த டிரைவர் கிடைப்பது உத்தமம்.  டிரைவரே வழிகாட்டியாய் இருப்பது அதை விட உத்தமம்.


"இது ஹோய்சளர்கள் கால கட்டடமா.  அவங்க, கோவில் முகப்புல கோபுரம் கட்ட மாட்டாங்க."


டிரைவர் முன்னால் நடக்க அவரைப் பின் தொடர்ந்தோம். கோவில் காலியாய் இருந்தது. ஈ, காக்கை இல்லை.


கொடி மரம் தாண்டி,  மண்டபத்தின் படிகளில் ஏறினோம்.  மூடிய கதவு எங்களை வரவேற்றது.


கையில் உள்ள கடிகாரத்தை நோட்டம் விட்டார் கணவர்.


"சாய்ங்காலம் நாலு தானே ஆறது.   அதுக்குள்ள…...?"


தீடிரென்று எங்கிருந்தோ முளைத்தார் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த ஒருவர். டிரைவரிடம் கன்னடத்தில் ஏதோ கூறினார்.


"கோவில் பட்டர் விளக்குக் எண்ணெய் எடுத்துட்டு வர வீடு வரைக்கும் போயிருக்காராம்.  இப்ப வந்துடுவாராம்," கன்னடத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார் டிரைவர்.


"கோவில்ல கூட்டமே இல்லையே," படிகளில் உட்கார்ந்தபடியே கேட்டார் மாமனார்.


"இங்க அவ்வளவு கூட்டம் வராதுங்க.  உங்கள மாதிரி மேல்கோட்டைக்கு போறவங்க, போற வழில, இங்க வந்து பெருமாள பாத்துட்டு போவாங்க."


தூரத்தில் பல ஓட்டு வீடுகள் தெரிந்தன. இதில் ஏதாவது ஒரு வீடு பட்டரின் வீடாக இருக்க வேண்டும்.


"அந்த காலத்துல இங்க ஒரு ஜைன ராஜா இருந்தாராம்."  நாங்கள் கேட்காமலேயே, கோவிலின் வரலாற்றைக் கூறத் தொடங்கினார் டிரைவர்.  "அந்த ராஜாவோட பொண்ணுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போச்சாம்.  யாராலயும் குணபடுத்த முடியலை.   ராஜாவோட ஜைன குருக்களாலயும் குணபடுத்த முடியலை. அப்புறம் நம்ம ராமானுஜர் தான் வந்து குணபடுத்தினாராம்.  அதனால சந்தோஷமான அந்த ராஜா ஜைன மதத்துலேந்து வைஷ்ணவ மதத்துக்கு மாறிட்டாராம். அந்த ராஜா கட்டினது தான் இந்த கோவில்."


"நம்ம ராமானுஜர்" என்று டிரைவர் கொண்டாடியது அழகாக இருந்தது.


"அதோ பட்டர் வராரு," டிரைவர் சுட்டிக் காட்டினார்.


வலது கையில் கூடையுடன், ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார் அந்த பட்டர்.


"வாங்கோ, வாங்கோ.  மெட்ராஸ்லேந்து வரேளா," என்றபடியே படிகளில் ஏறி பூட்டியிருந்த கதவை திறந்தார். "கரண்ட்டு போயிடுத்து.  எண்ணெயும் தீந்து  போச்சு. அதான் எடுத்துண்டு வர போனேன்."


மீண்டும் படிகள்.  இறங்கிய பின் சிறு வெட்டவெளி.  வெட்டவெளியை தாண்டி  ஒரு மண்டபம்.


"முன்னாடி எல்லாம் எப்பவாது ஒரு தடவை தான் கரண்ட் போகும்.  இப்ப அடிக்கடி போறது," சொல்லியபடியே மண்டபத்திற்குள் நுழைந்தார்.  முன்னால் இருந்த வெட்டவெளி, மண்டபத்திற்குள் சிறிது வெளிச்சத்தை தந்தது.


"இதான் பெருமாள் சன்னிதி.  ஒரு நிமிஷம் இருங்கோ, விளக்கு ஏத்திடறேன்."  படிகள் ஏறி கர்ப்பகிரகத்தின் கதவை திறந்தார்.  உள்ளே கும்மிருட்டு.  எதுவும் தெரியவில்லை.  இந்த இருட்டில், எப்படி விளக்கை தேடி ஏற்றப் போகிறார் என்று நினைத்த நொடியில்,  தீக்குச்சியின் "சரக்" சத்தம் காதில் விழுந்தது.


விளக்கின் முதல் முகம் ஏற்றப்பட, இருள் சற்று விலகியது.  இரண்டாம் முகம் ஏற்றியபோது, யாரோ ஒருவர் ஆஜானுபாகுவாய் நிற்பது போல் இருந்தது.  மூன்றாம் முகத்தில், திருமேனியின் கருமையும், வஸ்த்திரத்தின் வெண்மையும், அதன் மேல் தவழ்ந்த துளசி மாலையின் கரும் பச்சையும் தெரிந்தது. நான்காம் முகம் ஏற்றபட்டபோது, தலையின் கிரீடமும், நெற்றியின் திருமண்ணும், சங்கம் ஏந்திய வலது கையும், சக்கரம் தாங்கிய இடது கையும் தெரிந்தது.  ஐந்தாம் முகம் நம்பி நாராயணனையும், அவரின் தேவி மார்களையும்,  முழுமையாகக் காட்டியது.  பேசும் திருக் கண்களும், சிரிக்கும் திருவாயும்……இது பெருமாளின் திருவுருவச் சிலையா, இல்லை, உண்மையாகவே இங்கு நின்று கொண்டிருக்கிறாரா……பரவசத்தில் மெய் சிலிர்த்து,கண்கள் பனித்தது.  மனம் குணலைக் கூத்தாடியது.  வாய் அவரிடம் ஏதேதோ பேச துடித்தது.


ஏற்றிய தீபங்கள் ஆடக் கொண்டிருக்க, பட்டர் ஆழ்வாரின் பாடலை இசைத்துக் கொண்டிருந்தார்.


      "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
        அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
        பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
        என்னாழி வண்ணன்பால் இன்று"


வாஷிங்கடன் டி.சி. சாலையில் எங்கள் கார் சென்று கொண்டிருந்தது.

Friday, October 19, 2012

வாழி எதிராசன் வாழி எதிராசன்

அது 2004ஆம் வருடம்.   ஶ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி  அமெரிக்காவிற்கு உபன்யாசம் செய்வதற்காக வந்திருந்த சமயம்.  அன்று அவர் வர்ஜினியாவில் உபன்யாசம் செய்யும் நாள்.  இப்பொழுது போல் அல்லாமல், ஒரே ஒரு நாள் இரவு மட்டுமே உபன்யாசம்.  அதுவும் அவர் நியு ஜெர்சியிலிருந்து வரவேண்டும்.  உபன்யாசம் முடித்துவிட்டு மீண்டும் நியு ஜெர்சி செல்ல வேண்டும்.  உபன்யாசத்திற்காக் ஒதுக்கப்பட்டிருந்த நேரம்  மாலை  6 மணி முதல் இரவு  ஏழரை வரை.  உபன்யாச நாயகர் "ஸ்வாமி மணவாள மாமுனிகள்".  சோதனையாக அன்று என் மகனின் பள்ளியில் "சுற்றுலா தினம்".   அது முடியும் போது மணி ஐந்து.  நாங்கள் இருப்பது மேரிலாந்தில்.  எங்கள் இடத்திலிருந்து வர்ஜினியா செல்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் ஆகும்.  மணி ஐந்து தானே, ஆறு மணிக்குள் எப்படியாவது விரைந்து சென்று விடலாம் என்று மனக்கோட்டைக் கட்டிக்கொண்டு காரில் ஏறி விரைந்தோம்.  விரைய முடியவில்லை.  அன்று வெள்ளிக்கிழமை.  வார இறுதி நாள்.  எக்கச்சக்க போக்குவரத்து நெரிசல்.  நத்தையை விட கார்கள் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன.  இந்த நெரிசலை கடந்து ஆறு மணிக்குள் வர்ஜினியா அடைவது மிக கடினம் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.    வர்ஜினியா கோவிலின் தொலைப்பேசி எண்ணும் எங்களுக்குத் தெரியாது.  ஸ்வாமி வந்து விட்டாரா, இல்லையா எதுவும் தெரியாது. மணி துளிகள் வேக வேகமாக நகர மனமும் வேக வேகமாக துடிக்க ஆரம்பித்தது.  மணி 6.30.  ஸ்வாமி இப்பொழுது உபன்யாசம் நிகழ்த்திக் கொண்டிருப்பார் என்று மனம் கூவிற்று.  இந்த நெரிசலைக் கடந்து நாம் வர்ஜினியா அடையும் போது உபன்யாசமே நிறைவுப் பெற்றிருக்கும் என்ற புலம்பல் வேறு.  ஒரு வழியாக நெரிசலை கடந்து நாங்கள் வர்ஜினியா கோவிலை அடையும் போது மணி 7.15.  ஸ்வாமியின் கணீர் குரல்  காதில் ஒலித்தது.  உபன்யாசம் முடியும் தருவாயில் வந்திருக்கிறோம், நமக்கு என்ன குடுத்து வைத்திருக்கிறதோ அதை கேட்போம் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு, காரை விட்டு இரங்கவும், ஒரு வைஷ்ணவ அடியார் எங்கள் அருகில் வந்து, " நியு ஜெர்சியிலிருந்து வரும் வழியில் சாலை நெரிசல், ஆதலால் ஸ்வாமி இப்பொழுது தான் வந்தார்," என்று கூறினார்.  உண்மையாகவே எங்கள் காதுகளில் தேன் வந்து பாய்ந்தது அன்று.

அன்று முழுக்க முழுக்க அவர் சொன்னது "ஸ்வாமி மணவாள மாமுனிகள் ப்ரபாவம்".  எங்கள் காதுகளில் முழுக்க முழுக்க விழுந்தது "ஸ்வாமி இராமானுசர் ப்ரபாவம்".  அன்று தான் "ஸ்வாமி இராமானுசர்" என்ற பெருந்தெய்வம் எங்களை பீடித்தது.  அது வரை குரங்கு குட்டிப் போல்  ஸ்வாமி இராமானுசரை நாங்கள் பற்றிக் கொண்டிருந்தோம்.  அன்று  முதல் பூனைத் தாயைப் போல் "ஸ்வாமி இராமானுசர்" எங்களைப் பிடித்துக் கொண்டார்.  எட்டு வருடங்கள் கழித்து இன்று கிருஷ்ணன் ஸ்வாமி என்ன உறையாற்றினார் என்று நினைவில்லை.  ஆனால் "ஸ்வாமி இராமானுசரை"ப் பற்றினால் தான் நமக்கு உய்வு என்று அவர் கூறியது நினைவில் உள்ளது.  "ஸ்வாமி இராமானுசரை"ப் பற்றுவதற்கு எளிய வழி "ஸ்வாமி மணவாள மாமுனிகள்" இயற்றிய "யதிராஜ விம்சதியை"க் கற்பது தான் என்று எங்களுக்கு அன்று பணித்தது நினைவில் உள்ளது.  அவர் வார்த்தையை ஏற்று, சென்னைக்கு விடுமுறையில் சென்ற போது "யதிராஜ விம்சதி"சந்தை ஆயிற்று.  ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும், நம் காலத்திற்கு பிறகு, பல நூற்றாண்டுகள் கழித்து ஒரு ஜீவன் பிறக்கும், அந்த ஜீவனுக்காக இன்றே நாம் பாடிவைப்போம் என்று தோன்றும் வகையில் ஒவ்வோர் ஸ்லோகமும் என்னையே குறிவைப்பதுப் போல் இயற்றியுள்ளார்.  யதிராஜ விம்சதியின் பன்னிரெண்டாவது ஸ்லோகம் மிகச் சரியான உதாரணம்.

              அந்தர்பஹிஸ் ஸகலவஸ்துஷூ ஸந்தமீஸமந்த:
                     புரஸ்ஸ்திதமிவாஹமவீஷமாண:
             கந்தர்ப்பவஸ்யஹ்ருதயஸ்ஸததம் பவாமி ஹந்த
                   த்வதக்ரகமநஸ்ய யதீந்த்ர நார்ஹ:

(எம்பெருமானாரே!எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் ஒக்க வியாபித்துள்ள எம்பெருமானைப் பிறவிக்குருடன் தன் முன்புள்ள பொருளைக் காண இயலாததுபோல காணமாட்டாதவனாய், எப்போதும் மன்மதனுக்கு வசப்பட்டவனாய் உள்ளேன்.  அந்தோ! தேவரீர் திருமுன்பே வரவும் அடியேன் யோக்யதை அற்றவன்.)

யதிராஜ விம்சதியைப் படிக்க படிக்க நம் கதை நம் கண் முன்னே விரியும். நம் வேலையை சுளுவாக்கி, நாம் ஸ்வாமி இராமானுசரிடம் முறையிட வேண்டிய அனைத்தையும், ஸ்வாமி மணவாள மாமுனிகள் நமக்காக வேண்டியுள்ளார். கட்டாயமாக நாம் ஒவ்வொருவரும் யதிராஜ விம்சதியின் இருபது ஸ்லோகங்களையும் அதன் அர்த்தத்தோடு கற்க வேண்டும்.   கற்க முடியாவிட்டாலும் ஒரு முறையாவது படித்துப் பார்க்க வேண்டும்.



ஸ்வாமி இராமானுசரைக் காட்டிக் கொடுத்த ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கும், ஸ்வாமி மணவாள மாமுனிகள் மூலம் ஸ்வாமி இராமானுசரைக் காட்டிக் கொடுத்த வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கும், இற்றைக்கும் ஏறேழ்ப்பிறவிகும் தலையல்லால் கைமாறிலேனே.


                           



                             வாழியெதிராசன் வாழியெதிராசன்*
                             வாழியெதிராசனெனவாழ்த்துவார்*- வாழியென
                             வாழ்த்துவார் வாழியென வாழ்த்துவார்*தாளிணையில்
                             தாழ்த்துவார் விண்ணோர்தலை.



Thursday, April 26, 2012

இராமாநுச னடிப்பூ மன்னவே.

ஆறு மாதங்கள் அல்ல, ஒரு வருடம் அல்ல, இரண்டு வருடங்கள்  அல்ல.  மிகச் சரியாக மூன்று  வருடங்கள் ஆயிற்று எனக்கு,  "இராமாநுச நூற்றந்தாதி" கற்றுக் கொள்வதற்கு.  இராமானுசரைப் பற்றி 108 பாசுரங்கள் கற்க நான் எடுத்துக் கொண்ட மூன்று  வருடங்கள் மிக அதிகம்.  முதல் 40 பாசுரங்கள் எளிதில் வந்துவிட்டது.  "ஆஹா, நமக்கு சுலபமாக வந்துவிட்டதே" என்று தலைக் கணம் ஏறியது. என் கணம் பாசுரத்தின் நாயகருக்கு தெரிந்து விட்டதோ என்னவோ, அடுத்த 68 பாசுரங்களை  கற்பதற்குள் நான் திண்டாடிப்  போனேன்.  எனக்கு நானே விரித்துக் கொண்ட வலைகள் போறாதென்று  "அவர்" விரித்த வலையில் அழகாக மாட்டிக்கொண்டேன்.  வலை பின்னுவதில் அவருக்கு நிகர் அவரே.  முதலில் வெள்ளியிலான வலை விரித்தார்.  கற்றுக் கொண்டிருக்கும் இராமாநுச நூற்றந்தாதியை மறந்து, ஆஹா, வெள்ளி மிக அழகாக இருக்கிறதே என்று வலையில் மாட்டிகொண்டேன். அதில்  திளைத்து மகிழ்ந்து கொண்டு இருக்கும் போது, அதற்கு கீழே தங்கத்தாலான வலை. நான் அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறேன் என்று உணராமல், தங்க வலையில்  விழுந்தேன்.  அந்த தங்க வலையை அனுபவித்து முடிப்பதற்குள், வைர வலை  விரிந்தது.  அதிலும் மாட்டிகொண்டேன்.  வைரங்களை மேலே வாரிப் பூசிகொண்டிருக்கும் போது,  எனக்கே தெரியாமல் இரும்பு வலையில் தள்ளப்பட்டேன்.  "ணங்" என்று தலையில் முட்டிக்கொண்டபோது தான், நான் மறந்தது என் நினைவிற்கு வந்தது.  நினைவிற்கு வந்த நொடியில் மனம் கதறியது, "இராமானுசா, என்னை இந்த வலையில் இருந்து காப்பாற்று, உன் அடுத்த பிறந்த நாளைக்குள் கற்க வேண்டியதை கற்று முடிக்கிறேன்". நோயும் அவரே, மருந்தும் அவரே.  வலையில் இருந்து மீண்டு, சுறுசுறுப்பாக அடுத்த   40 பாசுரங்களைக் கற்றுக் கொண்டேன். மீதம் 28 பாசுரங்கள் தான் என்று சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கும் போது அடுத்த வலை. "கோவிலில் பெண்களுக்கு நாலாயிரம் சொல்ல அனுமதி கிடையாது. பின் எதற்காக கற்கிறாய்?" எங்கிருந்தோ ஒரு வெடி குண்டு.  "அவரின்" அருளால் இந்த வலையில் நான் விழவில்லை.  கோவிலுக்கு சென்று தான் நான் பாசுரங்கள் சொல்ல வேண்டும் என்றில்லை. என் மனதில் இருக்கும் இராமாநுசருக்கு என் வீட்டில் இருந்தபடியே பாசுரங்கள் சொல்ல முடியும்.  ஒரு வழியாக அந்த வலையும் தாண்டி, மற்றும் சில வலைகளையும் தாண்டி நான் வருவதற்குள் நாட்கள் உருண்டோடிவிட்டது.   இன்னும் 2  பாசுரங்கள் , ஒரே ஒரு நாள். கடவுள் விஷயத்தில் நாளை பொழுது நம் கையில் இல்லை என்பதால் அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு விழித்துக் கொண்டிருந்தேன்.  மறுநாள் பொழுது விடிந்தது.  இரண்டு பாசுரங்களும் மனதில் புகுந்தது. 

இன்று "இராமானுசரின் திருநட்சத்திரம்"  -  மூன்று வருடங்களாக திக்கித் திணறிக்  கற்றுக் கொண்ட "இராமாநுச நூற்றந்தாதி"யை, இன்று முதன் முதலில், முழுவதுமாக  கூறினேன். சொன்ன போதோ சொல்லிய பின்போ கூட எனக்கு உரைக்கவில்லை. ஆனால் இந்த நிமிடம் இதை எழுதும் போது கண்கள் குளமாகிவிட்டது.  அந்த மூன்று வருடங்களை திரும்பி பார்க்கிறேன்.  "என்னைத்தன் வாரமாக்கி வைத்தான்  வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்" என்று திருப்பாணாழ்வார் கூறியது போல், என்னுள் புகுந்து, என்னை கற்க வைத்து, நான் வேண்டியது போல்   இன்று 108 பாசுரங்களையும் என்னை சொல்ல வைத்த "இராமானுசா" உன்  அடிப்பூ மன்னுகிறேன். 

நான் இராமாநுச நூற்றந்தாதி கற்றுக் கொண்டதற்கு வேறு ஒரு காரணம் உண்டு.  என்னுடைய தீதுகளான  கோபமும்,அழுகையும்,ஆத்திரமும், என் குழந்தைகளுக்கு வருவது போல், நான் கற்ற "இராமானுசர்" என்ற மிக பெரிய நன்று  என் மூலம் என் குழந்தைகளுக்கு வர வேண்டும் என்பது என் ஆசை.அதுவும் தவிர, என்றேனும் ஒரு நாள் அவர்கள் "இராமாநுச நூற்றந்தாதி "கற்க முயலும்  போது, நான்  சொல்லிய சந்தை அவர்களுக்கு கட்டாயமாக உதவும் என்று நம்புகிறேன்.  என் தந்தை  தினமும் சொல்லியதால் எனக்கு "ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்" எளிதில் மனதில் ஏறியது. என் அம்மாவால் "திருப்பள்ளியெழுச்சி"யும் "ஶ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரமும்" ஆணி அடித்தது போல் நெஞ்சில் பதிந்தது. "ஶ்ரீ விஷ்ணுவும்", "ஶ்ரீ மஹாலக்ஷ்மியும்"என்னுள் பதிந்ததுப் போல், "இராமானுசா"என் குழந்தைகளின் மனதில் நீ பதிய வேண்டும் என்று உன் அடிப்பூ மன்னுகிறேன்.

இவை எல்லாவற்றையும் தாண்டி யோசித்துப் பார்த்தால் தொண்டரடிப் பொடி ஆழ்வார் எனக்காகவே சொல்லிய வரி நினைவுக்கு வருகிறது. "மனத்தில் ஓர் தூய்மை இல்லை, வாயில் ஓர் இன்சொல்  இல்லை". இப்படி எந்த தகுதியும் இல்லாத எனக்கு, இராமாநுச நூற்றந்தாதி சொல்ல தகுதி இருக்கிறதா,தெரியவில்லை.  எதுவாக இருந்தாலும் இன்று எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் "இராமாநுச நூற்றந்தாதி ".  இந்த 108 பாசுரங்களை என்றென்றும் மறவாதிருக்க வேண்டும் என்று இராமாநுசன் அடிப்பூ மன்னுகிறேன். 

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்* அடிபோற்றிசெய்யும்
நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன்*செம்மைநூற் புலவர்க்
கெண்ணருங் கீர்த்தி யிராமாநுச!இன்று நீ புகுந்தென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்*நின்ற விக்காரணம் கட்டுரையே.