நியூயார்க் நகரில் இருப்பது போல், வாஷிங்டன் டி.சி.யில் விண்ணை முட்டும் கட்டிடங்கள் கிடையாது. இங்கு இருப்பவை எல்லாம் சிறிய கட்டிடங்களே ஆனாலும், எல்லாம் சரித்திரம் பேசும் கட்டிடங்கள். அப்படியாகப்பட்ட சரித்திரப் புகழ்ப்பெற்ற கட்டிடங்கள் நிறைந்த "கான்ச்டிட்யூஷன் அவென்யு" வில், கார் திரும்பியது. சூரியன் மறைந்து, இரவு உதயமாகிக் கொண்டிருந்தது.
"இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?" என் இடது புறம் ஸ்டீயரிங்கின் மேல் கையையும், சாலையின் மேல் கண்ணையும் வைத்துக் கொண்டிருக்கும் கணவரைக் கேட்டேன்.
"கைலயோ மேப் இருக்கு. பாக்க வேண்டியது தானே."
"ரொம்ப தான், சொன்னா என்ன" என்று மனதில் கூறிக் கொண்டு, கையில் உள்ள வரைபடத்தை பார்த்தேன். என் நல்ல நேரம், அந்த வரைபடம் புரிந்தது.
"இந்த கான்ச்டிட்யூஷன் அவென்யுலயே போயிண்டு இருந்தா, அது பென்சில்வேனியா அவென்யுல ஜாயின் ஆறது. அதுலயே போனா, போர்த் ஸ்ட்ரீட் தாண்டி, தர்ட் ஸ்ட்ரீட்ல ரைட்ல திரும்பணும்."
"நம்ம அமெரிக்கா வந்த இத்தனை வருஷத்துல, அந்த பில்டிங்க பாக்க போறது, இது பத்தாவது தடவையா இல்ல இருவதாவது தடவையா?" அவர் குரலில் கிண்டலும், கேலியும் சரிவிகிதமாக கலந்திருந்தது.
"இதெல்லாமா கணக்கு வைச்சுப்பாங்க." என் வலது புற ஜன்னலின் வழியே சாலையில் நடப்பட்ட மரங்கள் ஆடாமல், அசையாமல் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. "ஆனா, நம்ம ஒரு தடவை கூட ராத்திரில பாத்ததில்லையே."
"கார்த்தால ஒரு மாதிரி இருக்க, ராத்திரி ஒரு மாதிரி இருக்க அந்த பில்டிங் என்ன சந்திரமுகியா?"
"ஜோக்கு?" முறைத்தேன். "ராத்திரி லைட்டெல்லாம் போட்டு சூப்பரா இருக்குமாம்."
முன்னால் நடப்பது ஏதும் தெரியாமல், பின்னால் அமர்ந்திருந்த பிள்ளைச் செல்வங்கள், டிவிடி ப்ளேயரில் எலியும் பூனையும் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன.
"ஆனாலும் இது ரொம்ப ஓவர். நம்ம வீடு வாஷிங்டன் டி. சி. பக்கத்துல இருக்குங்கறதுக்காக….." என்றவரை இடைமறித்தேன்.
"இப்டியே என்னை கலாட்டா பண்ணிண்டு இருந்தா, வழி மிஸ் ஆயிடும்," சொல்லிய படியே கையில் இருந்த வரைபடத்தைப் பார்த்தேன்.
வண்டி சடக் என்று நின்றது.
"ஏன், என்ன ஆச்சு?"
"அமெரிக்காவானாலும் ரெட் லைட் போட்டா நின்னு தான் ஆகணும்."
முன்னால் தெரிந்த பெரிய சிவப்பு பொட்டு என்னை பார்த்து முறைத்தது.
"இந்த ரெட் லைட்ட கண்டுபிடிச்சவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும்," மனதில் கறுவிக் கொண்டேன். கறுவியதின் விளைவு, பச்சை வண்ண பொட்டு என்னைப் பார்த்து கண் சிமிட்டியது.
பச்சை விளக்கிலிருந்து புறப்பட்ட வண்டி, சிறிது தூரம் நேராகச் சென்று, பின், பென்சில்வேனியா அவென்யூவில் சேர்ந்தது.
"வந்துட்டோம், கிட்டத்தட்ட வந்துட்டோம்." வரைபடத்தை கண் ஆராய்ந்து கொண்டிருந்தது.
"இந்த போர்த் ஸ்ட்ரீட் தாண்டி…." என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்தேன். மலைத்துப் போனேன்.
நெடிது உயர்ந்த மரங்களின் ஊடே அந்த கட்டடம் தெரிந்தது. மீண்டும் ஒரு முறை பார்பதற்குள் இலைகளின் நடுவே மறைந்து போனது. கார் சிறிது தூரம் செல்ல மீண்டும் இலைகளின் நடுவே அந்த காட்சி.
கார் வலது பக்கம் தர்ட் ஸ்ட்ரீட்டில் நுழைந்தது.
"பின்னாடி கார் எதுவும் வரல. கொஞ்சம் மெதுவா ஜானவாச கார் மாதிரி போங்கோ." காரின் வேகம் மாறியது.
காரின் இடது பக்க ஜன்னலின் வழியே, ஒரு மைல் தொலைவில், தேடி வந்து காட்சி. இருட்டில் ஜகஜ்ஜோதியாக மின்னிக் கொண்டிருந்தது அமெரிக்காவின் பாராளுமன்றம்.
இடமிருந்து வலமாக 750 அடி(எங்கயோ படித்த ஞாபகம்) நீளத்திற்கு விரிந்திருந்தது. கட்டிடம் முழுவதும் மஞ்சள் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு இருந்தது. கட்டிடத்தின் மத்தியில் வெள்ளை நிறத்தில் இரண்டு அடுக்குகள் கொண்ட மேற்கூரை உட்கார்ந்திருந்தது. முதல் அடுக்கு பறை வாத்தியம் போல் உருண்டு திரண்டு இருந்தது. அதன் மேல், கவிழ்த்து வைக்கப்பட்ட சந்தன பேலாவைப் போல் இரண்டாம் அடுக்கு வீற்றிருந்தது. இரண்டாம் அடுக்கின் மேல், ஒரு காக்கை ஒன்று உட்கார்ந்திருப்பது போல், கருப்பு வண்ணத்தில் சிலை ஒன்று நின்று கொண்டிருந்தது.
இருட்டின் கருப்பு, விளக்குகளின் மஞ்சள், உச்சிகூரையின் வெண்மை எல்லாம் சேர்ந்து மனதை மயக்கத்தில் ஆழ்த்தியது. கண்கள் காதுகள் வரை விரிந்தது. வாய் மூக்கு வரை பிளந்தது. கைகள் கன்னத்தை வந்தடைந்தது. ஆஹா, என்ன அழகு…வியந்து கொண்டிருந்த போது மெல்லிய "ஹாங்" சத்தம்.
"பின்னால கார் வந்துடுத்து. இனிமே மெதுவா போ முடியாது."
கணவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கார் வேகமாக செல்ல, கடைசி முறையாக மின்னும் அழகை கண்களில் வாங்கிக் கொண்டேன்.
"நம்ம இந்தியா பார்லிமெண்ட் கூட, ராத்திரில லைட் எல்லாம் போட்டு சூப்பரா இருக்குமா இருக்கும். நம்ம தான் போய் பார்த்தது கிடையாது," அவர் குரலில் ஆதங்கம்.
இந்தியா என்றவுடன், மனம் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது. இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில், இதே போல் இருட்டில் ஒளியைக் கண்டு, மெய் சிலிர்த்து நின்றது நினைவில் வந்தது. "அட, பைத்தியமே, இதே போல் இல்லை. இதற்கும் மேலாக, ஈடு இணையற்ற அனுபவம் அது," என்று மனம் இடித்தது. இந்தியாவில் எங்கே, எங்கே என்று மனம் நினைவலைகளில் நீந்தித் தேடியது. தேடித் தேடி, கர்நாடகாவில் வந்து நின்றது.
அப்பொழுதும் இதே போல் ஒரு காரில் பயணம். கார் ஒரு செம்மண் சாலையில் நின்றது.
"கோவில் வந்துடுச்சுங்க," டிரைவர் காரின் என்ஜினை அணைத்தார்.
காரை விட்டு இறங்கினோம். ஒரு கொடி மரமும், அதன் பின் செவ்வக மண்டபம் ஒன்றும் தெரிந்தது. கோவில் என்கிறார், கோபுரத்தைக் காணோமே என்ற என் மனதின் சந்தேகம் மாமியாரின் வார்த்தையில் வந்தது.
"கோவிலுக்கு கோபுரம் கிடையாதா?"
கர்நாடகாவில் தமிழ் தெரிந்த டிரைவர் கிடைப்பது உத்தமம். டிரைவரே வழிகாட்டியாய் இருப்பது அதை விட உத்தமம்.
"இது ஹோய்சளர்கள் கால கட்டடமா. அவங்க, கோவில் முகப்புல கோபுரம் கட்ட மாட்டாங்க."
டிரைவர் முன்னால் நடக்க அவரைப் பின் தொடர்ந்தோம். கோவில் காலியாய் இருந்தது. ஈ, காக்கை இல்லை.
கொடி மரம் தாண்டி, மண்டபத்தின் படிகளில் ஏறினோம். மூடிய கதவு எங்களை வரவேற்றது.
கையில் உள்ள கடிகாரத்தை நோட்டம் விட்டார் கணவர்.
"சாய்ங்காலம் நாலு தானே ஆறது. அதுக்குள்ள…...?"
தீடிரென்று எங்கிருந்தோ முளைத்தார் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த ஒருவர். டிரைவரிடம் கன்னடத்தில் ஏதோ கூறினார்.
"கோவில் பட்டர் விளக்குக் எண்ணெய் எடுத்துட்டு வர வீடு வரைக்கும் போயிருக்காராம். இப்ப வந்துடுவாராம்," கன்னடத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார் டிரைவர்.
"கோவில்ல கூட்டமே இல்லையே," படிகளில் உட்கார்ந்தபடியே கேட்டார் மாமனார்.
"இங்க அவ்வளவு கூட்டம் வராதுங்க. உங்கள மாதிரி மேல்கோட்டைக்கு போறவங்க, போற வழில, இங்க வந்து பெருமாள பாத்துட்டு போவாங்க."
தூரத்தில் பல ஓட்டு வீடுகள் தெரிந்தன. இதில் ஏதாவது ஒரு வீடு பட்டரின் வீடாக இருக்க வேண்டும்.
"அந்த காலத்துல இங்க ஒரு ஜைன ராஜா இருந்தாராம்." நாங்கள் கேட்காமலேயே, கோவிலின் வரலாற்றைக் கூறத் தொடங்கினார் டிரைவர். "அந்த ராஜாவோட பொண்ணுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போச்சாம். யாராலயும் குணபடுத்த முடியலை. ராஜாவோட ஜைன குருக்களாலயும் குணபடுத்த முடியலை. அப்புறம் நம்ம ராமானுஜர் தான் வந்து குணபடுத்தினாராம். அதனால சந்தோஷமான அந்த ராஜா ஜைன மதத்துலேந்து வைஷ்ணவ மதத்துக்கு மாறிட்டாராம். அந்த ராஜா கட்டினது தான் இந்த கோவில்."
"நம்ம ராமானுஜர்" என்று டிரைவர் கொண்டாடியது அழகாக இருந்தது.
"அதோ பட்டர் வராரு," டிரைவர் சுட்டிக் காட்டினார்.
வலது கையில் கூடையுடன், ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார் அந்த பட்டர்.
"வாங்கோ, வாங்கோ. மெட்ராஸ்லேந்து வரேளா," என்றபடியே படிகளில் ஏறி பூட்டியிருந்த கதவை திறந்தார். "கரண்ட்டு போயிடுத்து. எண்ணெயும் தீந்து போச்சு. அதான் எடுத்துண்டு வர போனேன்."
மீண்டும் படிகள். இறங்கிய பின் சிறு வெட்டவெளி. வெட்டவெளியை தாண்டி ஒரு மண்டபம்.
"முன்னாடி எல்லாம் எப்பவாது ஒரு தடவை தான் கரண்ட் போகும். இப்ப அடிக்கடி போறது," சொல்லியபடியே மண்டபத்திற்குள் நுழைந்தார். முன்னால் இருந்த வெட்டவெளி, மண்டபத்திற்குள் சிறிது வெளிச்சத்தை தந்தது.
"இதான் பெருமாள் சன்னிதி. ஒரு நிமிஷம் இருங்கோ, விளக்கு ஏத்திடறேன்." படிகள் ஏறி கர்ப்பகிரகத்தின் கதவை திறந்தார். உள்ளே கும்மிருட்டு. எதுவும் தெரியவில்லை. இந்த இருட்டில், எப்படி விளக்கை தேடி ஏற்றப் போகிறார் என்று நினைத்த நொடியில், தீக்குச்சியின் "சரக்" சத்தம் காதில் விழுந்தது.
விளக்கின் முதல் முகம் ஏற்றப்பட, இருள் சற்று விலகியது. இரண்டாம் முகம் ஏற்றியபோது, யாரோ ஒருவர் ஆஜானுபாகுவாய் நிற்பது போல் இருந்தது. மூன்றாம் முகத்தில், திருமேனியின் கருமையும், வஸ்த்திரத்தின் வெண்மையும், அதன் மேல் தவழ்ந்த துளசி மாலையின் கரும் பச்சையும் தெரிந்தது. நான்காம் முகம் ஏற்றபட்டபோது, தலையின் கிரீடமும், நெற்றியின் திருமண்ணும், சங்கம் ஏந்திய வலது கையும், சக்கரம் தாங்கிய இடது கையும் தெரிந்தது. ஐந்தாம் முகம் நம்பி நாராயணனையும், அவரின் தேவி மார்களையும், முழுமையாகக் காட்டியது. பேசும் திருக் கண்களும், சிரிக்கும் திருவாயும்……இது பெருமாளின் திருவுருவச் சிலையா, இல்லை, உண்மையாகவே இங்கு நின்று கொண்டிருக்கிறாரா……பரவசத்தில் மெய் சிலிர்த்து,கண்கள் பனித்தது. மனம் குணலைக் கூத்தாடியது. வாய் அவரிடம் ஏதேதோ பேச துடித்தது.
ஏற்றிய தீபங்கள் ஆடக் கொண்டிருக்க, பட்டர் ஆழ்வாரின் பாடலை இசைத்துக் கொண்டிருந்தார்.
"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"
வாஷிங்கடன் டி.சி. சாலையில் எங்கள் கார் சென்று கொண்டிருந்தது.

No comments:
Post a Comment