ஆறு மாதங்கள் அல்ல, ஒரு வருடம் அல்ல, இரண்டு வருடங்கள் அல்ல. மிகச் சரியாக மூன்று வருடங்கள் ஆயிற்று எனக்கு, "இராமாநுச நூற்றந்தாதி" கற்றுக் கொள்வதற்கு. இராமானுசரைப் பற்றி 108 பாசுரங்கள் கற்க நான் எடுத்துக் கொண்ட மூன்று வருடங்கள் மிக அதிகம். முதல் 40 பாசுரங்கள் எளிதில் வந்துவிட்டது. "ஆஹா, நமக்கு சுலபமாக வந்துவிட்டதே" என்று தலைக் கணம் ஏறியது. என் கணம் பாசுரத்தின் நாயகருக்கு தெரிந்து விட்டதோ என்னவோ, அடுத்த 68 பாசுரங்களை கற்பதற்குள் நான் திண்டாடிப் போனேன். எனக்கு நானே விரித்துக் கொண்ட வலைகள் போறாதென்று "அவர்" விரித்த வலையில் அழகாக மாட்டிக்கொண்டேன். வலை பின்னுவதில் அவருக்கு நிகர் அவரே. முதலில் வெள்ளியிலான வலை விரித்தார். கற்றுக் கொண்டிருக்கும் இராமாநுச நூற்றந்தாதியை மறந்து, ஆஹா, வெள்ளி மிக அழகாக இருக்கிறதே என்று வலையில் மாட்டிகொண்டேன். அதில் திளைத்து மகிழ்ந்து கொண்டு இருக்கும் போது, அதற்கு கீழே தங்கத்தாலான வலை. நான் அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறேன் என்று உணராமல், தங்க வலையில் விழுந்தேன். அந்த தங்க வலையை அனுபவித்து முடிப்பதற்குள், வைர வலை விரிந்தது. அதிலும் மாட்டிகொண்டேன். வைரங்களை மேலே வாரிப் பூசிகொண்டிருக்கும் போது, எனக்கே தெரியாமல் இரும்பு வலையில் தள்ளப்பட்டேன். "ணங்" என்று தலையில் முட்டிக்கொண்டபோது தான், நான் மறந்தது என் நினைவிற்கு வந்தது. நினைவிற்கு வந்த நொடியில் மனம் கதறியது, "இராமானுசா, என்னை இந்த வலையில் இருந்து காப்பாற்று, உன் அடுத்த பிறந்த நாளைக்குள் கற்க வேண்டியதை கற்று முடிக்கிறேன்". நோயும் அவரே, மருந்தும் அவரே. வலையில் இருந்து மீண்டு, சுறுசுறுப்பாக அடுத்த 40 பாசுரங்களைக் கற்றுக் கொண்டேன். மீதம் 28 பாசுரங்கள் தான் என்று சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கும் போது அடுத்த வலை. "கோவிலில் பெண்களுக்கு நாலாயிரம் சொல்ல அனுமதி கிடையாது. பின் எதற்காக கற்கிறாய்?" எங்கிருந்தோ ஒரு வெடி குண்டு. "அவரின்" அருளால் இந்த வலையில் நான் விழவில்லை. கோவிலுக்கு சென்று தான் நான் பாசுரங்கள் சொல்ல வேண்டும் என்றில்லை. என் மனதில் இருக்கும் இராமாநுசருக்கு என் வீட்டில் இருந்தபடியே பாசுரங்கள் சொல்ல முடியும். ஒரு வழியாக அந்த வலையும் தாண்டி, மற்றும் சில வலைகளையும் தாண்டி நான் வருவதற்குள் நாட்கள் உருண்டோடிவிட்டது. இன்னும் 2 பாசுரங்கள் , ஒரே ஒரு நாள். கடவுள் விஷயத்தில் நாளை பொழுது நம் கையில் இல்லை என்பதால் அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு விழித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் பொழுது விடிந்தது. இரண்டு பாசுரங்களும் மனதில் புகுந்தது.
இன்று "இராமானுசரின் திருநட்சத்திரம்" - மூன்று வருடங்களாக திக்கித் திணறிக் கற்றுக் கொண்ட "இராமாநுச நூற்றந்தாதி"யை, இன்று முதன் முதலில், முழுவதுமாக கூறினேன். சொன்ன போதோ சொல்லிய பின்போ கூட எனக்கு உரைக்கவில்லை. ஆனால் இந்த நிமிடம் இதை எழுதும் போது கண்கள் குளமாகிவிட்டது. அந்த மூன்று வருடங்களை திரும்பி பார்க்கிறேன். "என்னைத்தன் வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்" என்று திருப்பாணாழ்வார் கூறியது போல், என்னுள் புகுந்து, என்னை கற்க வைத்து, நான் வேண்டியது போல் இன்று 108 பாசுரங்களையும் என்னை சொல்ல வைத்த "இராமானுசா" உன் அடிப்பூ மன்னுகிறேன்.
நான் இராமாநுச நூற்றந்தாதி கற்றுக் கொண்டதற்கு வேறு ஒரு காரணம் உண்டு. என்னுடைய தீதுகளான கோபமும்,அழுகையும்,ஆத்திரமும், என் குழந்தைகளுக்கு வருவது போல், நான் கற்ற "இராமானுசர்" என்ற மிக பெரிய நன்று என் மூலம் என் குழந்தைகளுக்கு வர வேண்டும் என்பது என் ஆசை.அதுவும் தவிர, என்றேனும் ஒரு நாள் அவர்கள் "இராமாநுச நூற்றந்தாதி "கற்க முயலும் போது, நான் சொல்லிய சந்தை அவர்களுக்கு கட்டாயமாக உதவும் என்று நம்புகிறேன். என் தந்தை தினமும் சொல்லியதால் எனக்கு "ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்" எளிதில் மனதில் ஏறியது. என் அம்மாவால் "திருப்பள்ளியெழுச்சி"யும் "ஶ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரமும்" ஆணி அடித்தது போல் நெஞ்சில் பதிந்தது. "ஶ்ரீ விஷ்ணுவும்", "ஶ்ரீ மஹாலக்ஷ்மியும்"என்னுள் பதிந்ததுப் போல், "இராமானுசா"என் குழந்தைகளின் மனதில் நீ பதிய வேண்டும் என்று உன் அடிப்பூ மன்னுகிறேன்.
இவை எல்லாவற்றையும் தாண்டி யோசித்துப் பார்த்தால் தொண்டரடிப் பொடி ஆழ்வார் எனக்காகவே சொல்லிய வரி நினைவுக்கு வருகிறது. "மனத்தில் ஓர் தூய்மை இல்லை, வாயில் ஓர் இன்சொல் இல்லை". இப்படி எந்த தகுதியும் இல்லாத எனக்கு, இராமாநுச நூற்றந்தாதி சொல்ல தகுதி இருக்கிறதா,தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இன்று எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் "இராமாநுச நூற்றந்தாதி ". இந்த 108 பாசுரங்களை என்றென்றும் மறவாதிருக்க வேண்டும் என்று இராமாநுசன் அடிப்பூ மன்னுகிறேன்.
புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்* அடிபோற்றிசெய்யும்
நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன்*செம்மைநூற் புலவர்க்
கெண்ணருங் கீர்த்தி யிராமாநுச!இன்று நீ புகுந்தென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்*நின்ற விக்காரணம் கட்டுரையே.
No comments:
Post a Comment